அரிசிக்கு இந்தியா ஏற்றுமதித் தடை விதித்ததைத் தொடர்ந்து பல நாடுகளில் மக்கள் அரிசியை வாங்கிக் குவிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள் மளிகைப் பொருள் கடைகளில் உள்ள அரிசி வெகு விரைவில் விற்பனையாகி விடுவதைக் காட்டுகின்றன.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா வரை பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அரிசி வாங்கிக் குவிக்கும் செய்தி பரவலாகி வருகிறது. சில கடைகள் வாடிக்கையாளர் ஒருவர் இவ்வளவு அரிசிதான் வாங்கலாம் என்ற கட்டுப்பாட்டை விதிக்கத் தொடங்கியுள்ளன. மற்ற சில கடைகள், மக்கள் அரக்கப் பரக்க வாங்குவதைப் பார்த்து நிலைமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரிசி விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகங்களோ அரிசி பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சுகின்றன.
ஆசியாவிலும் சரி, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் சரி அரிசி பலரது சாப்பாட்டில் இன்றியமையாதது. பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடை செய்ததற்குக் காரணம் இந்தியாவில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவே. ஆனால், மோசமான பருவநிலை காரணமாகவும் உக்ரேன் போர் காரணமாகவும் ஏற்கெனவே திண்டாடி வரும் உலக உணவுச் சந்தை இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
“கடந்த சில நாள்களில் சிலர் வழக்கமாக வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அரிசி வாங்கிச் செல்கின்றனர். அதனால், நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிட்டுள்ளது,” என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவின் சரே ஹில்ஸ் பகுதியில் எம்ஜிஎம் ஸ்பைசஸ் என்ற கடையை வைத்திருக்கும் திரு ஷிசிர் ஷைமா.
தற்பொழுது அவரது மளிகைக் கடையில் ஒருவர் ஐந்து கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும். இதனால் சிலர் ஆவேசப்படுகின்றனர். ஆனால், அவர்கள் கூடுதலாக வாங்க நாங்கள் அனுமதிப்பதில்லை,” என்கிறார் இவர்.
அமெரிக்காவில் சிலர் அரிசி வாங்கிக் குவிக்கும் காணொளிகள் வலம் வருகின்றன. எனினும் இவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிட்டிநியூஸ் தொலைக்காட்சி செய்திப்படி, கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள சில தென்னிந்திய மளிகைப் பொருள் கடைகள் அரிசி வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதுடன் அரிசி விலையையும் உயர்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.