மக்களவைத் தேர்தலில் மஜத தனித்துப் போட்டி: தேவகவுடா அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் மஜத தனித்துப் போட்டி: தேவகவுடா அறிவிப்பு

2 mins read
df20ddcd-58d9-408f-aa10-d1987b8cecb6
கர்நாடகாவில் ஆளும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஹெச்.டி.தேவகவுடா, “வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வாரத்தில் தேவகவுடாவின் மகனும், மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தார். தவிர, வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, கர்நாடகாவில் ஆளும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவினருடன் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை குமாரசாமி சந்தித்தார்.

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காகவே பாஜகவுடன் குமாரசாமி கைகோத்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மஜத மூத்த தலைவர் ஆயனூர் மஞ்சுநாத் கூறும்போது, ‘‘ஜூலை 28-ம் தேதிக்கு பிறகு கர்நாடக அரசியல் சூழல் மாறும். பாஜகவும் மஜதவும் இணைந்து முக்கியமான போராட்டங்களை முன்னெடுக்கும்.

இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து குமாரசாமியை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப் போகின்றன,’‘ எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், தேவகவுடாவின் அறிவிப்பு பாஜகவுடன் மஜத கூட்டணி என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்