மும்பை: மனைவியை கொலை செய்த பல் டாக்டருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை தாதர் பகுதியை சோ்ந்தவர் உமேஷ் போபலே. பல் டாக்டர். இவரது மனைவி தனுஜா. பல் டாக்டருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து 2 பேரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவத்தன்று ஜீவானம்சம் தொடர்பாக பல் டாக்டருக்கும், தனுஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பல் டாக்டர் 5 வயது மகன் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். சம்பவம் குறித்து காவல்துறை, பல் மருத்துவர் உமேஷ் போபலே மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது பல் டாக்டர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியை கொலை செய்த பல் டாக்டர் உமேஷ் போபலேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

