100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து ஒரே ஆண்டில் 5 கோடி பேர் நீக்கம்

1 mins read
ca12e816-c7ee-40eb-975a-33b5d0ab9c28
மேற்கு வங்க மாநிலத்தில்தான் ஆக அதிகமான பணியாளர்கள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: 2022 - 2023 நிதி ஆண்டில் ‘எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்’ எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து ஐந்து கோடிப் பேர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது கடந்த 2021 - 22 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247% அதிகம்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துபூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு இத்திட்டம் அமலுக்கு வந்தது. இது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாள்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படும்.

“மாநில அரசுகள் இதுபோன்று பணியாளர்களை நீக்குவது வழக்கமான செயல்தான். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் புள்ளிவிவரங்களின்படி, போலி வேலை அட்டை, வேலையில் விருப்பமின்மை, பணியாளர் குடும்பத்துடன் நிரந்தரமாகக் குடிபெயர்தல், ஒருவர் மட்டுமே ஒரு பகுதியில் பணியில் இருத்தல், பணியாளர் உயிரிழத்தல் என மொத்தம் பத்துக் காரணங்களால் மாநில அரசுகள் சிலரை இத்திட்டத்திலிருந்து நீக்கக்கூடும்,” என்று அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்