திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கனமழை 27ஆம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் 2.5 மீட்டர் முதல் 2.9 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டதால் ஜூன் 28ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லச்சத்தீவு ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இவ்வேளையில், ஜூலை 27ஆம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஹைதராபாத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.