புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகள் மீட்டுக்கொள்ளப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
2,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டுக் காலம் முடிவுற்றதால் அவற்றைத் திரும்பப் பெறுவதாக மே 19ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மே 19ஆம் தேதி நிலவரப்படி, ரூ.356,000 கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
ஜூன் 30ஆம் தேதி வரை ரூ.272,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.
இன்னும் ரூ.84,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதியை செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிப்பது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

