தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரிசி ஏற்றுமதித் தடையை இந்தியா அகற்ற அனைத்துலக பண நிதியம் முயலும்

2 mins read
682bf814-67c0-418a-b6c0-cef2e4260905
அமெரிக்காவில் சில பேரங்காடிகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசிதான் என்று வரம்பு விதித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: இந்திய ஊடகம் 

புதுடெல்லி: குறிப்பிட்ட வகை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்து இருக்கிறது.

இந்தத் தடையை அகற்றுமாறு இந்தியாவை ஊக்குவிக்கப்போவதாக அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்து இருக்கிறது.

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருப்பதால் உலகளவில் பணவீக்கத்தில் அதனுடைய தாக்கம் தெரியவந்திருப்பதாக அந்த நிதியம் குறிப்பிட்டு உள்ளது.

பாசுமதி சாராத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய ஜூலை 20ஆம் தேதி இந்திய அரசாங்கம் தடை விதித்தது.

உள்நாட்டில் போதிய அரிசி இருப்பை உறுதிப்படுத்தவும் அரிசி விலை ஏறாமல் தடுக்கவும் ஏற்றுமதித் தடை விதிப்பதாக இந்தியா அறிவித்தது.

இந்தியா ஏற்றுமதி செய்யும் மொத்த அரிசியில் பாசுமதி சாராத வெள்ளை அரிசி அளவு கால்வாசியாகும்.

இதர வகை அரிசியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று இந்தியாவின் உணவுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இப்போதைய உலகச் சூழலில் இந்தியா விதித்து இருக்கும் தடை காரணமாக உலகின் எஞ்சிய பகுதிகளில் உணவு விலைகள் உயரும் வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன், இந்தியாவின் தடைக்குப் பதிலடியாகப் பல நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநர் பியர் ஆலிவர் கொரிஞ்சாஸ் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆகையால், ஏற்றுமதித் தடையை அகற்றும்படி நிச்சயமாக நாங்கள் இந்தியாவைக் கேட்டுக்கொள்வோம் என்று செய்தியாளரின் கேள்விக்கு அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.

பாசுமதி சாராத வெள்ளை அரிசியை அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியா ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவும் அதிகரித்து வருகிறது.

இந்தியா விதித்து இருக்கும் தடை பல நாடுகளிலும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் அரிசி விற்பனைக்குப் பல பேரங்காடிக் கடைகள் வரம்பு விதித்து வருகின்றன. இந்தியத் தடையை அடுத்து அமெரிக்காவாழ் வெளிநாட்டு இந்தியர்கள் அரிசி வாங்க பல கடைகளுக்கும் படை எடுத்துச் செல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பை அரிசிதான் என்று பல கடைகளும் வரம்பு விதித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்