புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கப்படுவதாக நாடாளுமன்ற நாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகாய், பாரதிய ராஷ்டீரிய சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நம நாகேஸ்வர ராவ் இருவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான அறிவிப்பை புதன்கிழமை காலை வெளியிட்டனர்.
முன்னதாக மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் அவை கூடியதும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கப்படுவதாக நாடாளுமன்ற நாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் மன்ற உறுப்பினர் ஒருவர் 198வது பிரிவின்கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடியும்.
ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துக் கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற நாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் ஆய்வு செய்வார்.
அதில் கையெழுத்திட்டுள்ள உறுப்பினர்களைக் கணக்கிட்ட பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்துக்குத் தேதியை அறிவிப்பார்.
அதன் பொருட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு திருவாட்டி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
அதையடுத்து, நாடாளுமன்ற காங்கிரஸ் துணைத் தலைவரும் அசாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ் கோகாய் மக்களவைச் செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

