புதுடெல்லி: வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் இனக் கலவரத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், “நாங்கள் மணிப்பூர் வன்முறை குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். அதுபற்றி விவாதிக்க அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடியோ, கிழக்கிந்திய கம்பெனி’ பற்றி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மோடி பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிலவிய அமளியால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இண்டியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக கேலி செய்துள்ளார். மேலும், தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கிவரும் எதிர்க்கட்சியினரைத் “திக்கற்றவர்கள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாராந்திர கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, “இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை.
‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்று கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட எதிர்க்கட்சிகளின் முன்னணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது.
அதில் 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, இந்திய தேசிய உள்ளடங்கிய வளர்ச்சிக் கூட்டணி என பொருள்படும்படி ‘இண்டியா’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 20ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் “மணிப்பூர் மாநிலக் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்,” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனால் வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான மூன்று நாள்களிலும் எந்தவிதமான அலுவல்களும் நடக்கவில்லை. அதையடுத்து எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

