புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியைக் கட்டிக்காக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
“மணிப்பூரும் இந்தியாவின் பகுதி என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் இவ்வேளையில் அரசு தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மணிப்பூரில் ஆளும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சட்டா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால், பிரதமர் ஏன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. அதனாலேயே நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டோம். அந்தத் தீர்மானத்தால் ஆட்சிக்கு எவ்விதப் பாதிப்பும் வரப்போவதில்லை என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும் எங்களுக்கு வேறு வழியில்லை, நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் முன்னர் வந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும்,” என்றார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசுகையில், “இன்று நாங்கள் அமளியில் ஈடுபடப்போவதில்லை. மாறாக கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டும் கையில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டும் வந்துள்ளோம். மணிப்பூரின் எல்லையில் மியன்மார் உள்ளது. அங்கு இருப்பதைப் போல் தீவிரவாதம் இங்கும் தலைதூக்கக்கூடும். எனவேதான் மணிப்பூரில் அமைதி ஏற்படுத்துவதை முக்கியமாகக் கருதுகிறோம்,” என்றார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பெருமைகளை அடுக்கி உரைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் பிரதமர் அவைக்குவர வலியுறுத்தியும், மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தியும் பேசினர். அப்போது என்டிஏ கூட்டணியினர் ‘மோடி, மோடி..’ என்று குரல் எழுப்ப, ‘இண்டியா’ கூட்டணியினர் ‘இண்டியா, இண்டியா’ என்று குரல் ஒழுப்பினர்.
இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்ப அவை அதிர்ந்தது. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.

