புதுடெல்லி: இந்தியாவின் உத்தேச மக்கள்தொகை 139 கோடி என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு என மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் கூறியிருப்பதாவது: ஐநா பொருளியல், சமூக விவகாரத்துறையின் மக்கள்தொகைப் பிரிவு இணைய வெளியீட்டின்படி சீனாவின் உத்தேச மக்கள்தொகை 2023 ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம்.
மத்திய சுகாதார அமைச்சின் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்ட அறிக்கைப்படி இந்தியாவின் உத்தேச மக்கள்தொகை 2023 ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி 139 கோடியே 23 லட்சத்து 29,000.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் நடத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

