மணிப்பூர் செல்கின்றனர் ‘இண்டியா’ எம்.பி.க்கள்

மணிப்பூர் செல்கின்றனர் ‘இண்டியா’ எம்.பி.க்கள்

1 mins read
9e88caaf-d163-4660-a561-3feba5bc64a8
‘இண்டியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற, நடைபெறும் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களைச் சந்திப்பதற்காக ‘இண்டியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் செல்லவுள்ளனர்.

முன்னதாக, பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூரில் ஜூலை 27ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

மணிப்பூரில் மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ள மோரேபஜார் பகுதியில் வன்முறையாளர்கள் ஒன்றுதிரண்டு வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்றும் காங்போக்பி மாவட்டத்தில், பாதுகாப்புப் படை வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்