ஐஃபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்

ஐஃபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்

படம்: இந்திய ஊடகம்

28 Jul 2023 - 7:13 pm

1 mins read

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்று ஐஃபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்தேவ் கோஷ்- சதி என்னும் அந்தத் தம்பதிக்கு 7 வயதில் மகளும் உள்ளார். குழந்தையின் தாய் சதி, குழந்தையை வாங்கிய பெண் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜெய்தேவை தேடி வருகின்றனர்.

பாரக்பூர் காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், “குழந்தையை சனிக்கிழமை முதல் காணவில்லை. அதுகுறித்து பெற்றோர் புகார் ஏதும் அளிக்கவில்லை. இது தொடர்பாக சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், தம்பதியிடம் புத்தம் புதிய ஐஃபோன் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

“இதையடுத்து அவர்கள் எங்களிடம் புகார் அளித்தனர்.

“இது குறித்து சதியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தானும் தனது கணவரும் மேற்கு வங்கம் முழுவதும் சுற்றுலா சென்று அதை இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் பதிவிட முடிவு செய்ததாகவும் அதற்காக ஐஃபோன் வாங்க பணம் தேவைப்பட்டதால் குழந்தையை விற்றதாகவும் கூறியுள்ளார்,” என்றார் அந்த அதிகாரி.

விசாரணைக்குப் பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா கோஷ் என்பவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. பிரியங்கா கோஷ் மீது ஆட்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐஃபோனுக்காக குழந்தை விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை

தொடர்புடைய செய்திகள்