பெங்களூரு: உலக நகரங்களின் கலாசார அமைப்பில் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு இடம்பிடித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ‘டபிள்யூசிசிஎஃப்’ எனும் உலக நகரங்களின் கலாசார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க், தோக்கியோ உட்பட 40 மாநகரங்கள் அங்கம் வகிக்கின்றன.
இந்தியாவில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது.
இந்த அமைப்பு அதன் உறுப்பு நகரங்களை ஆராய்ந்து அவற்றின் மேம்பாடு, பாதுகாப்பு, கலாசார ஊக்குவிப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது. லண்டன், நியூயார்க், தோக்கியோ ஆகிய மாநகராட்சிகளின் அதிகாரிகள் அந்த நகரங்களைப் பார்வையிட்ட பிறகு உரிய ஆலோசனைகள வழங்குவர்.
பெங்களூருவை உலகளாவிய நகரமாக மாற்றுவதற்காக ‘அன்பாக்சிங் பிஎல்ஆர்’ என்ற திட்டத்தைக் கர்நாடக மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரை எதிர்காலத் தேவைக்கு உகந்தவாறு மறுகட்டமைப்பு செய்வது நோக்கம்.
“பெங்களூரு மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம். அதேவேளையில் பாரம்பரியம், கலாசார விழுமியங்களையும் அது கொண்டுள்ளது. பல மொழி, மதம், சாதி, இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழும் பெங்களூரில் இந்தக் கலாசாரத்தை மேலும் வலுப்படுத்த புதிய உத்திகளை கையாளத் திட்டமிட்டுள்ளோம்,” என்று லண்டன் நகரின் கலாசாரம், படைப்பாற்றல் துறைத் துணை மேயர் ஜஸ்டின் சைமன்ஸ் கூறினார்.
“தொழில்நுட்ப நகரமாக மட்டும் இல்லாமல், கலாசார ரீதியாக மேம்பட்ட நகரமாகவும் அதை மாற்ற இருக்கிறோம். இதன் மூலம் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறுவதுடன் இந்தியாவின் கலாசாரத் தலைநகரமாகவும் உருவெடுக்கும்” என்றார் அவர்.


