புதுடெல்லி: நாட்டையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மணிப்பூர் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பல்பிர் புஞ்ச் எழுதிய ‘நேரேட்டிவ் கா மாயாஜால்’ என்ற புத்தக வெளியீட்டில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “மணிப்பூரில் மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டாலும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தாலும் அது மிகவும் வெட்கக் கேடானது. ஆனால் உண்மையான சோதனை என்பது குற்றவாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை என்பது தான்,” என்று கருத்துரைத்தார்.
குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா இல்லையா என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம். ஆனாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய அரசு இயந்திரத்தை நீங்கள் செயல்பட அனுமதிக்கும்போது அது தானாக நடக்கும். அவ்வாறு நடக்கிறது என்று நான் எண்ணுகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

