பெங்களூர்: பெங்களூருவில் குண்டுவெடிப்புச் சதித் திட்டம் தீட்டியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி நசீரை 8 நாள் காவல்துறை கண்காணிப்பில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரில் உள்ள சுல்தான் பாளையாவில் ஜூலை 19ஆம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த ஐந்து பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்களில் ஜாகித் தப்ரேஜ் என்பவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டு இருந்தது. கைதான 5 பேருக்கும் ஆயுதங்கள் விநியோகம் செய்தவர்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள்.
பெங்களூருவில் கைதான ஐந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்த மற்றொரு பயங்கரவாதி பற்றி துப்பு கிடைத்துள்ளது. அவர் துபாயில் பதுங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட அந்த ஐந்துபேரும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, கடந்த 2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நசீருடன் பழக்கம் ஏற்பட்டது.
நசீர் அவர்களுக்குச் சிறையில் பயங்கரவாதப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதுபோல் இப்போது தலைமறைவாக இருக்கும் ஜூனைத் என்பவருக்கும் நசீர் சிறையில் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறையில் இருந்தே பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தது, பெங்களூருவில் குண்டுவெடிப்பில் ஈடுபடத் திட்டமிட்டது தொடர்பாக பயங்கரவாதி நசீரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்தது.
அதற்காக பெங்களூரு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாதி நசீரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கேட்டு இருந்தனர். இந்த நிலையில், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் நசீரை 8 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.


