தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவலை தீரும் அளவிற்கு இந்தியாவில் நெல் சாகுபடி தீவிரம்

2 mins read
053b5f9b-ccb0-4375-b58b-64dbddc65416
இந்தியாவில் நெல் சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி தொடர்பில் நிலவி வரும் கவலை அகலும் என்று நம்பப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய விவசாயிகள் இந்தப் பருவத்தில் இதுவரை 23.7 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் சாகுபடியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 1.71% அதிகம் என்று இந்திய வேளாண்மைத் துறை அமைச்சின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம் பருவமழை பெரும்பாலும் பொய்க்கவில்லை. பருவமழை காரணமாக விவசாயிகள் ஊக்கத்துடன் நெல் பயிரிட்டு வருகிறார்கள்.

உலகிலேயே அரிசி ஏற்றுமதியில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது. நெல் சாகுபடி அதிகரித்து இருப்பதால் அரிசி உற்பத்தி தொடர்பான கவலைகள் நீங்க வழிபிறக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா பாசுமதி அல்லாத வெள்ளை ரக அரிசி ஏற்றுமதிக்கு அண்மையில் தடை விதித்தது.

இந்திய விவசாயிகள் பொதுவாக ஜூன் முதல் தேதியில் இருந்து நெல், சோளம், பருத்தி, சோயா, கரும்பு, நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிடத் தொடங்குவார்கள்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம்தான் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். அந்த மழை ஆகஸ்ட் வரை நீடிக்கும்.

இந்தப் பருவமழை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள பண்ணை நிலங்களில் ஏறக்குறைய பாதி அளவுக்கு நீர்ப்பாசன வசதி இல்லாமல் வறண்டு கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் இந்தியாவில் வழக்கத்தைவிட 10% குறைவாகத்தான் மழை பெய்தது. சில மாநிலங்களில் மழை 60% வரை குறைவாகப் பெய்தது.

ஜூலையில் சராசரி அளவுக்கு மழை பெய்யும் என்று ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்து இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூலை மாத மழையும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

பஞ்சாப், அரியானா போன்ற உணவு தானியங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இந்த மாதம் கடும் மழை பெய்ததால் வெள்ளம்கூட ஏற்பட்டது.

அதேவேளையில், நாட்டின் சில பகுதிகளில் வறண்ட நிலை நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்