திருப்பதி: இலங்கையைச் சேர்ந்த சிவகுமாரி விக்னேஸ்வரி, 25, என்ற பெண், இந்தியாவின் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா என்ற பகுதியை அடுத்துள்ள அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன், 28, என்ற கட்டடத் தொழிலாளியைக் கடந்த ஆறு ஆண்டுகளாக ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்தார்.
விக்னேஸ்வரி தன் காதலர் லட்சுமணனைத் திருமணம் செய்துகொள்ள சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் காத்திருந்த லட்சுமணன், விக்னேஸ்வரியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் 15 நாள்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அந்தத் திருமணம் சமூக ஊடகங்களில் பரபரப்பானது. அதைக் கண்ட காவல் துறை அதிகாரிகள் விக்னேஸ்வரியைத் தொடர்புகொண்டனர்.
அவருக்கு வழங்கப்பட்ட விசா ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைவதால் அந்தத் தேதிக்குள் அவர் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இல்லை என்றால் விக்னேஸ்வரி விசாவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்மையில் சீமா-சச்சின்; அஞ்சு-நஸ்ருல்லா என்ற இந்தியா-பாகிஸ்தான் எல்லை கடந்த இரு காதல் கதைகள் பெரிதாகப் பேசப்பட்டன.
அதைத் தொடர்ந்து இப்போது இந்த இந்தியா-இலங்கை காதல் கதை பரபரப்பாகி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, இலங்கைப் பெண் விக்னேஸ்வரி, தான் தன்னுடைய கணவருடன் தொடர்ந்து இந்தியாவிலேயே வசிக்க ஏதுவாக தனக்கு அனுமதி வழங்கும்படி இந்திய நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார்.
விக்னேஸ்வரி இந்திய குடியுரிமை பெறத் திட்டமிடுவதாக ஆந்திர காவல்துறைத் தலைவர் கூறினார் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்தது.
அவர் ஓராண்டு கால விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவருக்கு அனேகமாக இந்தியக் குடியுரிமை கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
திருமணத்தை உடனடியாக இந்தியாவிலும் இலங்கையிலும் பதிவு செய்யும்படி அந்தத் தம்பதிக்கு இந்திய காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறி இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இருநாட்டு காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.