தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னதாகவே வந்து சென்ற விரைவு ரயில்; 45 பயணிகள் புகார்

2 mins read
185aaca8-f67a-4c0b-b604-ff502b548fe2
கோவா-புதுடெல்லி விரைவு ரயில் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நாசிக் அருகே உள்ள மன்மத் என்ற நிலையத்திற்கு வந்து ஐந்தே நிமிடங்களில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.  - படம்: இந்திய ஊடகம்

கோவா: இந்தியாவின் பொதுப் போக்குவரத்தின் முதுகெலும்பாகத் திகழும் ரயில்வே துறை நாள் ஒன்றுக்கு மில்லியன் கணக்கான மக்களை பல இடங்களுக்கும் ஏற்றிச் சென்று சேவை செய்து வருகிறது.

தொலைதூர பயணங்களுக்கு மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவில் ரயில்கள் அட்டவணைப்படி குறித்த நேரத்திற்கு வந்து செல்வதில்லை என்பது நீண்ட நெடுங்காலமாகவே நிலவி வரும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதனால், பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ரயில் சேவை தாமதம் அடைவதால் ரயில்கள் எந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் புறப்பட்டுச் செல்லும் என்பது தெரியாமல் மக்கள் பெரும் சங்கடத்திற்கு அடிக்கடி ஆளாகுகிறார்கள்.

இதன் தொடர்பில் தாக்கலாகும் புகார்களுக்கும் குறைவில்லை.

இந்த நிலையில், கோவாவில் இருந்து புதுடெல்லிக்குச் சென்ற விரைவு ரயில் அட்டவணைப்படி வர வேண்டிய நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே நாசிக் அருகே உள்ள மன்மத் என்ற ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டது.

அந்த நிலையத்தில் அந்த விரைவு வண்டியில் பயணம் செய்ய 45 பயணிகள் முன்னதாகவே பயணச்சீட்டுகள் வாங்கி இருந்தார்கள்.

ஆனால், அந்த விரைவு வண்டி ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே வரும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

முன்னதாகவே வந்த அந்த ரயில் வண்டி ஐந்தே நிமிடங்களில் புறப்பட்டுச் சென்றுவிட்டது. குறித்த நேரத்தில் வந்த பயணிகள் ஏமாந்ததுதான் மிச்சம்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

உடனடியாக அந்தப் பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ரயில் முன்னதாகவே வந்து சென்றதைப் பற்றி விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்