மணிப்பூர் ஆளுநரிடம் ‘இண்டியா’ அறிக்கை தாக்கல்

2 mins read
8e29acf6-f00b-4ea2-8735-5981e75ded3c
எதிர்த்தரப்பு கூட்டணியான இண்டியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை தங்கள் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அங்கு இரண்டு இன மக்களுக்கிடையே கடந்த சில மாதங்களாக கைகலப்புகளும் வன்செயல்களும் அரங்கேறி வருகின்றன. அங்கு 150க்கும் மேற்பட்டவர்கள் மாண்டுவிட்டனர். ஏராள பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ஐஎன்டிஐஏ (இண்டியா) என்ற எதிர்த்தரப்பு கூட்டணியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூரின் நிலவரங்களை நேரடியாகக் காண்பதற்காக அங்கு சென்றனர்.

அவர்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மணிப்பூரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து நிலவரங்களை எல்லாம் திரட்டினர்.

அவர்கள் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, மணிப்பூர் கலவரங்கள் தொடர்பிலான தங்கள் கருத்துகள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்தனர்.

பிறகு அந்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மணிப்பூர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வேண்டுமானால் எல்லாரும் சேர்ந்து செயல்படுமாறு மணிப்பூர் ஆளுநர் தெரிவித்து இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே எங்கள் நம்பிக்கை. அப்போது மக்களின் குரல்களை நாங்கள் மன்றத்தில் ஒலிப்போம். மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளையும் முன்வைப்போம்.

ஆகையால், இந்திய அரசாங்கம் தாமதிக்காமல் எதிர்த்தரப்பினரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று மணிப்பூர் விவகாரம் பற்றி மன்றத்தில் விவாதம் நடத்த முன்வர வேண்டும்.

மணிப்பூர் பிரச்சினை தேசிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டிய சூழலை அது ஏற்படுத்திவிட்டது என்று எதிர்த்தரப்பு சார்பில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்