ஆலுவா: கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சிறுமியின் இறுதிச் சடங்கு கீழ்மாடு ஊராட்சி பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தைக்காட்டுக்கரா பள்ளியில் சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில்தான் சிறுமி ஒன்றாம் வகுப்பு பயின்றுவந்தார். இதனால், சிறுமியை கடைசி ஒருமுறை பார்ப்பதற்காக அதிகாலை முதலே பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
சிறுமியின் உயிரற்ற உடலைக் கண்ட சக மாணவர்கள், ஆசிரியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் பலரும் , குற்றவாளிக்கு எதிரான தங்களின் கோபமான மனநிலையை வெளிப்படுத்தினர். சிறுமியுடன் படிக்கும் மாணவியின் தாய் ஒருவர், “குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்து அவருக்கு உணவளிப்பது நீதியாகாது,” என்று கோபமாகப் பேசினார்.
இதேபோல், “சிறுமியை கொன்றதுபோல் குற்றவாளியையும் கொல்ல வேண்டும். அரசு அதனை செய்ய முடியாவிட்டால் பொதுமக்களிடம் குற்றவாளியை ஒப்படைத்து விடுங்கள். இவ்வாறான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதற்காக தனிகொள்கைகளை வகுக்க வேண்டும்,” என்றும் அஞ்சலி செலுத்த வந்த பெண்கள் ஆவேசமாக கோபத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர், சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்மாடு ஊராட்சி பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியைத் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அலுவாவில் சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப் பையில் அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.