பாஜக பொதுச் செயலாளராக அனில் ஆண்டனி

பாஜக பொதுச் செயலாளராக அனில் ஆண்டனி

2 mins read
e0044c05-3703-43e8-8e93-e7a27febd587
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் காங்கிரசில் இருந்து விலகிய அனில் ஆண்டனி திடீரென பாஜக.வில் சேர்ந்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி. பிரதமர் மோடிக்கு எதிராக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதை வைத்து கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர். ஆனால், அனில் ஆண்டனி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் அனில் ஆண்டனியை கடுமையாக சமூக ஊடகங்களில் வசைபாடினர்; மிரட்டல்களும் விடுத்தனர். இதையடுத்து, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் காங்கிரசில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, திடீரென பாஜக.வில் சேர்ந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளராக அனில் ஆண்டனி நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று பேசியபோது, “வரும் 2047ஆம் ஆண்டு நாடு நூற்றாண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து செல்வதற்கு வாய்ப்பாக இந்த தேசிய பொதுச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க பாடுபட ஆர்வமாக இருக்கிறேன்,” என்று கூறினார்.

“என்மீது நம்பிக்கை வைத்து பொதுச் செயலாளர் பதவி தந்து என்னை பாஜக கௌரவப்படுத்தி உள்ளது. அதற்காக பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற தலைவர்களுக்கு பணிவுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்தில் எனக்கு ஆதரவளிப்பவர்கள், வழிகாட்டுபவர்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

“இந்த ஆண்டு பாஜகவுக்கு மிக முக்கியமானது. அடுத்து ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் என்று பாஜகவுக்கு நிறைய சவால்கள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற பாஜகவில் உள்ள ஒவ்வொருவரும் முழுமையாகப் பாடுபட வேண்டும்,” என்றும் அனில் ஆண்டனி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்