கேரளாவில் மனைவிக்கு பயந்து மாயமான கணவன் கண்டுபிடிப்பு

கேரளாவில் மனைவிக்கு பயந்து மாயமான கணவன் கண்டுபிடிப்பு

1 mins read
386b5f0e-3bd2-4b61-832e-b1573e92fdea
உயிருடன் திரும்பிய மகனைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட்ட தாயார். - படம்: மாத்ருபூமி

இடுக்கி: கேரளாவில் மனைவியின் தொல்லைக்கு பயந்து மாயமான கணவரை காவல்துறையினர் தீவிர தேடுதலுக்குப் பின் கண்டறிந்துள்ளனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்தின் களஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷத், 34. இவரது மனைவி அப்சனா, 25.

இவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த 2021 நவம்பர் முதல் திடீரென நவ்ஷத் காணாமல் போனார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

நவ்ஷத்தின் மனைவி அப்சனாவிடம் விசாரணை நடத்தியபோது அவரைக் கொலை செய்து புதைத்துவிட்டதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலைத் தேடிவந்த நிலையில், தொடுபுழா அருகே உள்ள ஒரு கிராமத்தில் நவ்ஷத் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அங்குள்ள பண்ணையொன்றில் கூலி வேலை செய்துவந்துள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவி தன்னுடன் நாள்தோறும் சண்டையிட்டு வந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் நவ்ஷத் தெரிவித்தார்.

மேலும், அப்சனாவின் உறவினர்கள் தினமும் அடித்து உதைத்ததால் உயிருக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறி கண்காணாத இடத்தில் வேலை செய்து வந்ததாக விசாரணையின்போது நவ்ஷாத் கூறினார்.

இந்த நிலையில்தான் தொம்மன்குத்து காவல்துறையினர் தற்போது அவரை உயிருடன் கண்டுபிடித்துள்ளனர். கணவர் குறித்து தவறான தகவல் அளித்த அப்சனாவைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்