புதுடெல்லி: மணிப்பூர் காணொளி விவகாரத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது ஏன் என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மெய்தி சமூக ஆண்கள் சிலரால் ஆடை களையப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட காணொளி ஒன்று ஜூலை 19ம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்களில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் காணொளி தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில், “மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும். அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை தொடர்பான எல்லா வழக்குகளையும் ஆறுமாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் தீவிரத்துடன் செயல்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மணிப்பூர் பெண்கள் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு தனியாக வழக்கு பதிந்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கை மனு, மணிப்பூர் விவகாரம், கலவரம் தொடர்பான இதர மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணிப்பூரில் தற்போதும் அமைதி திரும்பாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிர்பயா வழக்கு போன்றதன்று. மணிப்பூரில் வன்முறைக் கும்பலிடமே பெண்களைக் காவல்துறையினர் விட்டுச்சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? வன்முறை நடந்து இத்தனை நாள்களாகியும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறை என்ன செய்தது? மூன்று மாதங்கள் கடந்துவிட்டன, பல்வேறு சாட்சியங்கள் அழிந்துபோய் இருக்கும்; யார் வாக்குமூலம் கொடுக்க முன்வருவார்கள்? என மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் மனநிறைவு அளித்தால் நாங்கள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. மக்களுக்கு அரசுமீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான பதில் வழங்க மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.