சென்னை: சென்னைக்கு அடுத்துள்ள செங்கல்பட்டுக்கு அருகே ரூ.210 கோடி செலவில் புதிய மின்கலப் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பத்துப் புதிய தொழிற்சாலைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
இதையொட்டி மறைமலைநகரில் உள்ள மகிந்திரா சிட்டியில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ரூ.210 கோடி முதலீட்டில் மின்கலன் பரிசோதனை ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
இதன், அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட்-செய்யாறு தொழிற்பூங்காவில் உள்ள எஸ்.யு.வி. பரிசோதனை தளத்தில் ரூ.290 கோடி முதலீட்டில் மின்வாகன விபத்து பரிசோதனை ஆய்வகத்துக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.