சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் மூண்ட கலவரத்தில் மாண்டோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
பதற்றமான சூழலைக் கருத்தில்கொண்டு அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாண்டவர்களில் இருவர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள்; இருவர் உள்ளூர்வாசிகள். இன்னொருவரின் அடையாளம் ஏதும் தெரியவில்லை.
நிலைமை மோசமடையக்கூடாது என்பதற்காக அங்கு செவ்வாய்க்கிழமை முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
ஹரியானாவின் குருகிராமை ஒட்டி அமைந்துள்ளது நூ. இந்தப் பகுதியில் ஓர் அமைப்பினரின் சார்பில் யாத்திரை ஒன்று நடைபெற்றது.
இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளையர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளையர்கள் ஊர்வலத்தில் சென்றோர்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இருதரப்பும் மோதிக்கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் அங்கு குவிந்தனர்.
கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் அதிகாரிகள் சுட்டனர். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட ஓர் அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி காரணமாக இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த அமைப்பைச் சேர்ந்த மோனு மனேசர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த சர்ச்சைக் காணொளிகளைச் சில நாள்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது.
பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளையர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் மனேசருக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டது.
யாத்திரையின் போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று மனேசர் கூறியிருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளையர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்று காவல்துறை தெரிவித்தது.

