திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து காரில் சிலர் நட்சத்திர ஆமைகளை கடத்தி வருவதாக கேரள மாநில வனப் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் வந்தது.
அதன்பேரில் பாலோடு சந்தவிளை அம்பல்லூர் பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக மூவர் காரில் வந்தனர். அதிகாரிகள் காரைச் சோதனை செய்தபோது, அதில் அழிந்துவரும் அரியவகை உயிரினமான இரண்டு நட்சத்திர ஆமைகள் இருந்தன.
அவற்றைச் சந்தேகப் பேர்வழிகள் கடத்தியதாக நம்பப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் மூவரும் பாலோடு வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நட்சத்திர ஆமையை வீட்டில் வளர்த்தால் அதிக செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த அரிய வகை ஆமைகள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலைபோகும் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.