வெளிமாநிலத்தவர்களுக்குக் கட்டாயச் சான்றிதழ்: கேரள அரசாங்கம் முடிவு

2 mins read
d898bd62-8f60-4462-b817-1bc9e81ca808
படம்: - தமிழ் முரசு

திருவனந்தபுரம்: வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலைசெய்வோரால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதை அடுத்து, அவர்களுக்கென ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்ற இந்தியாவின் கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

கேரளாவில் வேலைசெய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் காவல்துறையிடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று மாநில பொதுக் கல்வி, தொழிலாளர்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியதாக ‘மனோரமா நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், வெளிமாநிலத்தவர்களை வேலைக்காக கேரளாவிற்கு அழைத்துவரும் தொழிலாளர் துறையிடமிருந்து உரிமம் பெறவேண்டும் என்றும் அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக ‘அதிதி’ எனும் கைப்பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்புச் சட்டம் குறித்து விவாதிக்க அதிகாரிகளுக்குத் தொழிலாளர் துறை ஞாயிற்றுக்கிழமை அவசர அழைப்பு விடுத்தது.

ஆலுவாவில் ஐந்து வயதுச் சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.

தானே அச்சிறுமியைக் கொலைசெய்ததாக பீகாரைச் சேர்ந்த அஸ்ஃபக் ஆலம் என்பவன் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபின் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்தது.

மறுநாள் சனிக்கிழமை ஆலுவா சந்தைக்கு அருகே, ஆள்நடமாட்டம் இல்லாப் பகுதியிலிருந்து அச்சிறுமியின் உடலைக் காவல்துறை மீட்டது.

இதனிடையே, 2016 முதல் 2023 வரையிலான ஏழாண்டுகளில் கேரளாவில் 214 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் 9,604 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் காவல்துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதே காலகட்டத்தில் அங்கு குழந்தைகளுக்கு எதிராக 31,364 குற்றச்செயல்கள் அரங்கேறியதாகவும் அத்தரவுகள் கூறுகின்றன.

மேலும், கடந்த ஏழாண்டுகளில் 118 கொலை வழக்குகளில் 159 புலம்பெயர் ஊழியர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு திட்டக் கழகம் வெளியிட்ட தரவின்படி, கேரளாவில் 3.4 மில்லியன் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

குறிப்புச் சொற்கள்