திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கட்கிழமை காலை 2:45 மணிக்குப் புறப்பட்டது.
பயணம் 30 மணி நேரம் தாமதமானதால் பலர் தாங்கள் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. அந்த பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் வேறொரு நல்ல நாளில் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கக்கூடிய ஏர் இந்தியா விமானம் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.