புதுடெல்லி: பிரதமர் மோடியை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மன்னிப்புக் கேட்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
2019 மக்களவைத் தோ்தலையொட்டி கா்நாடகத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில் மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தமக்கு எதிரான சிறைத் தண்டனையை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் செய்யாத குற்றத்திற்காக ஒருவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்திப்பது நீதித்துறை செயல்முறையின் மோசமான துஷ்பிரயோகம்.
“இந்த அவதூறு வழக்கில் நான் குற்றவாளி இல்லை. எனது பேச்சில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கேட்க முடியாது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் அதனை முன்னதாகவே செய்திருப்பேன்,” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.