மும்பை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவில் மூன்றாவது கூட்டணி உருவாவதற்கான சாத்தியம் உள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கின்றன. முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அண்மைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் என்று தெரிவித்துள்ளன.
எதிர்த்தரப்பினர் இதுவரை பாட்னா, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணியை (இண்டியா) உருவாக்கி உள்ளனர். இவர்கள் வசம் 26 கட்சிகள் இருக்கின்றன.
மறுபுறம் 38 கட்சிகள் தங்கள் வசமிருப்பதாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுதி செய்தது.
இதற்கிடையில் எந்தக் கூட்டணியிலும் சேராத கட்சிகளாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்டிர சமிதி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்டவை உள்ளன.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருக்கும் பெரிய கட்சி என்றால் பாரதிய ராஷ்டிர சமிதி தான். இக்கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் (படம்) மகாராஷ்டிரா சென்றிருந்தார்.
அங்குள்ள கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணியிலோ பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியிலோ தமது கட்சி இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நாட்டு மக்கள் என்டிஏ, இண்டியா என இரண்டு கூட்டணியையும் பார்த்துவிட்டார்கள். இந்தக் கூட்டணிகளால் புதிய இந்தியா பிறந்து விட்டதா?
“50 ஆண்டுகளாக இவர்கள்தான் ஆட்சி செய்தார்கள். ஆனால் எதுவும் மாறவில்லை. நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம்,” என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்திருப்பது இண்டியா கூட்டணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், சந்திரசேகர் ராவ் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு புதிய கூட்டணி உருவானால் வாக்குகள் பிரிந்து பாஜக எளிதில் வெற்று பெறும் நிலை ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பாக உள்ளது.

