ஹரியானாவில் பதற்றம் நீடிப்பு: 144 தடை உத்தரவு, இணையச் சேவை முடக்கம்

1 mins read
150c2872-656e-4b33-8e96-1fede974a833
நூஹ் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட கட்டடங்கள். அங்கு கலவரத் தடுப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். - ஏஎஃப்பி

புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் பதற்றம் மிகுந்த ஐந்து மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய வசதி முடக்கப்பட்டு உள்ளது.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் குருகிராமையடுத்த நூஹ் பகுதியில் கடந்த திங்களன்று, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி சென்றபோது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

பள்ளிவாசல், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. நான்கு நாள்களாகியும் வன்முறை இன்னும் அடங்கவில்லை.

அமைதி காக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்த ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டர், “எங்களால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது, காவல்துறையாலோ அல்லது ராணுவத்தாலோ கூட அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது,” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

தற்போது கைமீறிப் போய்க்கொண்டிருக்கும் இந்த வன்முறையானது நூஹ் பகுதி மட்டுமல்லாது அருகிலுள்ள குருகிராம், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. இதன் காரணமாக அந்தந்தப் பகுதிகளில் 20 மத்திய அதிரடிப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், பதற்றம் மிகுந்த ஐந்து மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையத்தள சேவை முடக்கப்பட்டுள்ளது. நூஹ், ஃபரிதாபாத், பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணையச் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்