புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஏராளமான மாணவர்கள் அனைத்துலக நாடுகளிலும் அனைத்துலக மாணவர்கள் இந்தியாவிலும் கல்வி கற்று வருகின்றனர்.
இதுபோல் இந்தியாவில் கல்வி கற்று வரும் அனைத்துலக மாணவர்களின் கல்வித் தேடல்களை எளிதாக்கும் வகையில் ‘இந்தியாவில் படி’ என்ற ஒரு புதிய இணையத் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த இணையத்தளத்தை தொடங்கிவைத்தனர்.
இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது இந்த இணையத் தளம். அனைத்துலக மாணவர்களுக்கான பதிவு, விசா அனுமதி உள்ளிட்ட விண்ணப்ப நடைமுறைகளையும் இத்தளம் வழி பெறலாம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்த இணையத் தளம் இந்தியாவை விருப்பமான கல்வி கற்கும் இடமாக மாற்றுவதுடன், வளமான எதிர்காலத்தை வடிவமைக்கவும் உதவும்,” எனக் கூறியுள்ளார்.

