பலத்த பாதுகாப்புடன் கியான்வாபி பள்ளிவாசலில் ஆய்வு

பலத்த பாதுகாப்புடன் கியான்வாபி பள்ளிவாசலில் ஆய்வு

2 mins read
d26204e1-4f6c-4aae-8af3-ae81cd4ba658
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளனர். அதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். - படம்: ஊடகம்

அலகாபாத்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது.

அந்தப் பள்ளிவாசல், அங்கிருந்த கோவில் இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் இந்துப் பெண்கள் சிலரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி தொல்லியல் துறை ஆய்வைத் தொடங்கியது. இதை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தை அணுகும்படி வலியுறுத்தியது. இதனால் கியான்வாபி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொள்ளத் தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்டு 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது: ஆய்வு செய்வதால், கட்டடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தொல்லியல் துறை உறுதி அளித்துள்ளது.

நீதியை நிலைநாட்டும் வகையில், உண்மையைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு நடத்தலாம். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றம் செய்யவும், தலையிடவும் விரும்பவில்லை. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆராய்ச்சிக்கான செலவை உத்தரப்பிரதேச அரசு ஏற்கும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கியான்வாபி வளாகத்தில் தொல்லியல் துறையின் ஆய்வுப் பணியை துவங்கி உள்ளனர். இதனையடுத்து மசூதி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து கியான்வாபி பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்