புதுடெல்லி: கோவாவில் ஷிவானி பித்ரே என்பவர் நாய்ப் பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டிகள் உள்ளன.
இந்த ரக நாய்கள் குட்டையானவை. மிகவும் புத்திசாலித்தனமானவை. மோப்பம் பிடிப்பதில் மற்ற நாய்களைக் காட்டிலும் திறமையானவை. நுட்பமான பார்வை, நீண்ட ஆயுளுடன் மிகவும் சுறுசுறுப்பானவை.
உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியால் அண்மையில் பதக்கம் வழங்கப்பட்ட நாய் இனம் இது.
ரஷ்யா-உக்ரேன் போரின்போது இந்த ரக நாய்கள்தான் மோப்பம் பிடித்து கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்தன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை இரவு தனிப்பட்ட பயணமாக கோவா சென்றபோது, ஷிவானி பித்ரேயின் பண்ணையில் இரண்டு ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டிகளைத் தத்து எடுத்தார்.
அதன்பின்னர் கோவா பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, தன்னுடன் ஒரு ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியையும் கொண்டு வந்தார்.
விமானத்தில் ஒரு நேரத்தில் ஒரு நாய்க்குட்டி மட்டுமே கொண்டுசெல்ல அனுமதி உள்ளது என்பதால் மற்றொரு நாய்க்குட்டி கூடிய விரைவில் அவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.