இம்பால்: மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக கலவரம் ஏற்பட்டுள்ளது.
க்வாக்டா பகுதியில் கலவரம் நடந்தது. அதில் மூன்று பேர் மாண்டனர். உயிரிழந்த மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் தற்போது மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் அதிகமாக உள்ள இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கலவரம் நடந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர்.
இதுதவிர கங்வாய், போக்சாவ் பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மைத்தேயி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டி நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.