புதிய யுகத்தில் இந்திய ரயில்வே; பிரம்மாண்ட திட்டம் தொடங்கியது

2 mins read
520770bd-3237-4769-bc93-5caf43828d34
‘அமிர்த பாரத் நிலையத் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் பெரம்பூர் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருத்தணி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களும் மேம்படும். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன் விமான நிலையம் போல் ரயில் நிலையங்கள் மேம்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய யுகம் தொடங்கி இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் செயல்படும் ரயில்வே நிலையங்களைச் சீரமைத்து மேம்படுத்துவதற்கான பிரம்மாண்ட திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

‘அமிர்த பாரத் நிலையத் திட்டம்’ என்ற அந்தத் திட்டத்தின்படி கோடானுகோடி ரூபாய் செலவில் நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான சுமார் 1,300 நிலையங்கள் அதி நவீன நிலைக்கு உயர்ந்து புதுப் பொலிவைப் பெற இருக்கின்றன.

திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ. 25,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் அந்த திட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காணொளி மூலம் அடிக்கல் நாட்டி பேசினார்.

“இந்தியா தனது வளர்ச்சி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய ஆற்றல், புதிய உத்வேகத்தை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.

“இந்த உணர்வில், இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய யுகம், ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது,” என்று திரு மோடி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகின் ஒருமித்த கவனமும் இப்போது இந்தியாவின் மீது திரும்பி இருக்கிறது என்றும் இந்தியாவின் பேரும் புகழும் உலகில் உச்சத்தை எட்டத் தொடங்கிவிட்டது என்றும் அவர் முழங்கினார்.

இதனிடையே, பிரதமர் அலுவலகம் இதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அமிர்த பாரத் நிலையத் திட்டம் மூலம் மேம்பட இருக்கின்ற ரயில் நிலையங்கள் 27 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ளன. அந்த நிலையங்கள் நகர மையங்களாக மேம்படுத்தப்படும்.

ரயில் நிலையமே ஒரு நகராக ஜொலிக்கும். அது அந்த அந்த நகர்ப் பகுதியுடன் இணைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அமிர்த பாரத் நிலையத் திட்டம் மூலம் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 18 ரயில் நிலையங்கள் மேம்படும்.

பெரம்பூர் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருத்தணி உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன் விமான நிலையம் போல் ரயில் நிலையங்கள் மேம்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்