பீகாரில் கொடூரம்: சிறுமியை ஒரு மாதம் சீரழித்த கும்பல்

1 mins read
05bc23b5-5ff5-4c6d-839b-0f6479a9976e
ஆறு பேர் கொண்ட கும்பல் சிறுமியை காரில் கடத்திச் சென்றதாக நம்பப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

முஸாஃபர்பூர்: பீகாரில் சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

முஸாஃபர்பூர் மாவட்டத்தில் சரய்யா என்னும் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிஸ்வானியா என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஜூலை 9ஆம் தேதி முதல் காணவில்லை.

அதனைத் தொடர்ந்து, கும்பல் ஒன்று தமது மகளை காரில் கடத்திச் சென்றதாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறுமியின் தாய்க்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. “சரய்யா சௌக் என்னும் பகுதிக்கு வந்து உனது மகளை அழைத்துச் செல்,” என்று தொலைபேசியில் பேசியவர் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சரய்யா செளக்கிற்குச் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் தமது மகள் கிடப்பதைக் கண்டு துயருற்றார். ஒருவழியாக மகளை மீட்டு வந்த அந்தப் பெண், நடந்தவற்றை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

சிறுமியின் வாக்குமூலம் நீதிபதியின் முன்பு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அச்சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களை சிறுமி அளித்துள்ளதால் அவர்களைத் தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக முஸாஃபர்பூர் நகர காவல் நிலைய அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்