தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: விவாதம் தொடங்கியது

2 mins read
9fa43ac3-8f0c-454e-ad8e-5d67b2ce9999
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகோய். - படம்: ஐஏஎன்ஸ்

புதுடெல்லி: மணிப்பூர் பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகோய் உரையைத் தொடங்கினார்.

பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோதி ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்திதான் உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், இப்போதோ கௌரவ் கோகோய் பேசுகிறாரே எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அவையில் பாஜகவினரும் காங்கிரசாரும் அமளியில் ஈடுபட்டனர். இரு தரப்பையும் அமைதிப்படுத்தி இருக்கைகளில் உட்காரும்படி கேட்டுக்கொண்டார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதனைத் தொடர்ந்து கௌரவ் கோகோய் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

கோகோய் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இவர் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் என்பதால் அவரே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து அதன் மீது முதல் உரையை ஆற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், அவர் தொடர்ந்து மௌனத்தையே தேர்ந்தெடுத்தார். அவரது பேசா நோன்பைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

எங்கள் வலுவை நிரூபிப்பதற்காக நாங்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட நீதி வேண்டி கொண்டுவரப்பட்ட தீர்மானம்.

மணிப்பூர் விவகாரம் பற்றி 80 நாட்களுக்குப் பின்னர் வெறும் 30 விநாடிகள் மட்டுமே பிரதமர் மோடி பேசியுள்ளார். அதுவும் அவைக்கு வெளியேதான் பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரட்டை என்ஜின் அரசின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,000 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 60,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தின் முதல்வர் பைரன் சிங், இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்திருக்க வேண்டும். கலவரம் தொடங்கிய மூன்று நாட்களில் அங்கு அவர் அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட அம்மாநில முதல்வர் பைரன் சிங் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தும் பைரன் சிங்கை மத்திய அரசு காப்பாற்ற நினைப்பது ஏன் என்று புரியவில்லை.

இவ்வாறாக கோகோய் தனது உரையில் பல முக்கியத் தகவல்களை முன்வைத்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்