பெங்களூரு: தன் கணவர் கறுப்பாக இருக்கிறார் என்று மனைவி அவரை இடைவிடாமல் குறைகூறுவது ஒரு கொடுமை. அது ஒரு குற்றச்செயல் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
இந்த அடிப்படையில் கணவருக்கு மணவிலக்கு அளிக்க முடியும் என்றும் அது குறிப்பிட்டு இருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் 2007ல் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. (அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றம் குறிப்பிடவில்லை)
இப்போது அந்த ஆடவருக்கு வயது 44. அவரின் மனைவிக்கு வயது 41. அந்த ஆடவர் 2012ல் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து தனக்கு மணவிலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை தன்னுடைய கணவரை அவருடைய தோல் நிறத்தை சுட்டிக்காட்டி மனைவி இடைவிடாமல் குறைகூறிக் கொண்டே வந்திருக்கிறார்.
கறுப்பு நிறத்தவருடன் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி கணவரை விட்டுவிட்டு அந்த மாது விலகியும் சென்று இருக்கிறார்.
தன்னுடைய இந்தக் குற்றச்செயலை மூடி மறைக்க அந்த மாது தன்னுடைய கணவர் மீது அபாண்டமாக பழிகளைச் சுமத்தி இருக்கிறார்.
கணவருக்கும் வேறு பல பெண்களுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அந்த மாது கதையைக் கிளப்பிவிட்டு இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
தன்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தாரும் சேர்ந்துகொண்டு தன்னைப் படாதபாடு படுத்துகிறார்கள் என்றும் வரதட்சணைக் கேட்டு தொல்லை தருகிறார்கள் என்றும் அந்த மாது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியவந்து இருக்கிறது.
மனைவி இந்த அளவுக்குத் தொல்லை கொடுத்தாலும் அவை அனைத்தையும் தன்னுடைய பெண் குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டு அந்த ஆடவர் சகித்துக்கொண்டே வந்திருக்கிறார். இனியும் தாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
மனைவியின் இத்தகைய செயல்கள் எல்லாம் நிச்சயமாக குற்றச்செயல்களாகவே கருதப்படும். இதன் அடிப்படையில் அந்தக் கணவருக்கு மணவிலக்கு அளிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.


