லக்னோ: உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சத்தமாக சிரிக்கத் தடை விதிக்கப்படவிருக்கிறது.
இந்தியாவிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 403 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
அதன்படி சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி உறுப்பினர்கள் உட்காரவோ நிற்கவோ கூடாது. உரையாற்றும்போது பார்வையாளர் பகுதியில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது, பாராட்டக்கூடாது, புகைபிடிக்கக் கூடாது.
மேலும் உறுப்பினர்கள் சத்தம்போட்டு சிரிக்கக் கூடாது. சட்டமன்றம் கூடும் காலம் 14 நாள்களிலிருந்து ஏழு நாள்களாகக் குறைக்கப்படுகிறது. சட்டமன்ற முதன்மைச் செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை இணையம் அல்லது ‘ஆஃப்லைன்’ மூலமாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

