ராய்பூர்: ஜானவி யாது. 30 வயதாகும் இவர், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
வாரத்தில் ஒரு நாள் மாணவர்களைப்போலவே இவரும் சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்.
ஆசிரியர்கள் அதிகாரத் தொனி கொண்டவர்கள் எனக் கருதப்படும் நிலையில், மாணவர்களில் ஒருவராகத் தன்னைக் கருதவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இந்த இளம் ஆசிரியை.
மாணவர்கள் மனம் வைத்தால் எதையும் அடைய முடியும் என ஊக்கப்படுத்துவது இவரது நோக்கம்.
அப்பள்ளி மாணவர்களிடையே முறையாக உடை உடுத்தும் பழக்கமோ, ஒழுங்குமுறையுடன் கூடிய நடத்தையோ காணப்படாத நிலையில் ஜானவி புத்தாக்கமுறையில் தனது முயற்சியை மேற்கொள்கிறார்.
இந்தக் கல்வி ஆண்டு ஜூன் 26ஆம் தேதி தொடங்கியதிலிருந்து சனிக்கிழமைகளில் சீருடை அணிந்து பள்ளி செல்கிறார்.
கவனித்தல், கேட்டல், அனுபவித்தல் ஆகியவற்றின் மூலமே பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டதால், தான் அவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகாட்ட முயல்வதாக இவர் கூறுகிறார்.
ஆசிரியரின் சீருடை குறித்துப் பிள்ளைகள் கேள்வி எழுப்பவே செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“நாம் அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். நம் குழுவின் வலிமையை எடுத்துச்சொல்ல ஒரே நிறத்தில் உடை அணியவேண்டும் அல்லவா?” எனக் கேட்ட ஆசிரியையுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினர் பிள்ளைகள். அவர்களுக்குச் சமமாக அமர்ந்து பேசும் ஜானவியிடம் தங்கள் கருத்துகளை பயமின்றிப் பகிர்கின்றனர்.
தனது புத்தாக்க முயற்சிகளுக்கு தன் குடும்பத்தினரின் ஆதரவும் நல்ல ஊக்கமாக அமைவதாகக் கூறுகிறார் ஜானவி.

