புதுடெல்லி: ஒட்டுமொத்த இந்தியாவின் குரலைக் கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தின் போது ஆவேசமாகப் பேசிய அவர், இந்திய ராணுவத்தால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரே நாளில் அமைதியைக் கொண்டுவர முடியும் என்றும் அதைச் செய்ய மத்திய அரசு முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
மணிப்பூர் என்ற மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும் மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் ராகுல் காந்தி காட்டத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த முறை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, தாம் தொழிலதிபர் அதானி குறித்து பேசியது பாஜகவினருக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்றும் அதற்காக இப்போது மன்னிப்பு கோருவதில் தயக்கம் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். எனினும், தாம் பேசிய அனைத்துமே உண்மைதான் என்றார் அவர்.
“கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம். உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
“நான் எனது மனத்தின் ஆழத்தில் இருந்து பேச விரும்புகிறேன். அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான எனது இந்திய ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை.
“நான் அன்பைச் செலுத்துவதற்காக மேற்கொண்ட பயணம் என்பதை மனதார உணர்ந்திருக்கிறேன். என் மனத்தில் இருந்த வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைத்து வைத்துள்ளேன்.
“இந்த நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு தாம் சென்று திரும்பி உள்ளதாக குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு நேரில் சென்று நிலைமையைக் கண்டறியவில்லை என்றார்.
மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசு இரண்டாகப் பிரித்து வைத்துள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு இதுவரை மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாகத் தெரியவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இந்தியா என்பது மக்களின் குரல் என்றும் மணிப்பூரில் அந்தக் குரல் கொல்லப்பட்டுவிட்டது என்றும் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.
அவர் மத்திய அரசு குறித்து விமர்சித்துப் பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சிதான் ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ராகுலின் பேச்சை இந்தியா மன்னிக்காது என்று குறிப்பிட்ட அவர், மணிப்பூர் மாநிலம் துண்டாடப்படவில்லை என்றார்.