மும்பை: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தமது பெரும் நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்காகப் பல வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி கடன் கேட்டுள்ளது.
குத்தகைதாரர்களுடனான விற்பனை, குத்தகை ஒப்பந்தத்திற்கு முன்பணம் செலுத்துவதற்காக இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’வுடன் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா இவ்வாண்டுத் தொடக்கத்தில் 470 விமானங்கள் வாங்குவதாக அறிவித்தது.
இவற்றில் 250 விமானங்கள் ஐரோப்பிய விமானத் தயாரிப்பாளரான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்தும் மீதமுள்ள 220 விமானங்கள் அமெரிக்க நிறுவனமான போயிங்கிலிருந்தும் வாங்குகிறது.
இந்த 470 விமானங்களின் விலை கிட்டத்தட்ட 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஏர் இந்தியாவின் ரூ. 37,500 கோடி வங்கிக் கடன் வசதியில் கிரிசில் ரேட்டிங் ஏஜென்சி ஜூன் மாதம் AAA மதிப்பீட்டை வழங்கியுள்ளது. வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.