புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சரமாரியாக கேள்விகளைக் கேட்டுள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் தயங்குகிறார். அவர் நாடாளுமன்றம் வருவதில் என்ன சிக்கல் இருந்தது? அவர் பிரதமர் தானே? அவர் ஒன்றும் கடவுள் இல்லையே” என்று மாநிலங்களவையில் கார்கே பேசியுள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த 8-ஆம் தேதி முதல் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது.
புதன்கிழமை அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச, அதற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி பதிலளிக்க, அவையில் அனல் பறந்தது.
பிரதமரின் மவுன விரதத்தை கலைக்கவே இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுமே பிரதமர் பதிலுரைக்க வேண்டும் என்று வாதிட்டன.
இதற்கிடையில், வியாழக்கிழமை காலை மக்களவை கூடியவுடனேயே எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின.
‘மணிப்பூர் இந்தியாவுடன் இருக்கிறது’ என்ற பதாகைகள் ஏந்தியபடி எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11 உடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்தார்.
“இன அழிப்பு வெட்கக்கேடானது என்று அமித்ஷாவே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதைவிட வெட்கக்கேடானது அதைவைத்து அரசியல் செய்வது என்று கூறியுள்ளார். அதனை நான் ஏற்கவில்லை. அது தவறான கருத்து.
இன அழிப்பு பற்றிய விவரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதும், அதைப் பற்றி விவாதிப்பதும் ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். குறிப்பாக அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
உண்மையான வேதனை எதுவென்றால் மணிப்பூரில் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்தும்கூட பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லாமல் இருப்பதே,” என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

