இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவமனைக்கு அஷ்தா என்ற 41 வயது பெண் வயிற்று வலி காரணமாகச் சிகிச்சைக்கு வந்தார்.
பெண்ணிற்கு பரிசோதனைகள் மேற்கொண்டபோது அவருக்கு அடிவயிற்றில் மிகப்பெரிய கட்டி வளர்ந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், உதவியாளர்கள் இரண்டு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்தக் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
கிட்டத்தட்ட 15 கிலோ எடை இருந்தது அந்தக்கட்டி.
“கட்டி பெரியதாக இருந்ததாலும், உணவு உண்ணும் போதும், நடக்கும்போதும் நோயாளிக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாலும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
“மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பல நரம்புகள் மீது கட்டி பரவியிருந்தது. அறுவை சிகிச்சையில் சிறு தவறு நேர்ந்தாலும் அது ஆபத்தில் முடிந்துவிடும். எனவே மருத்துவர்கள் மிகவும் நுட்பமாகச் செயல்பட வேண்டியிருந்தது,” என்றது இன்டெக்ஸ் மருத்துவமனை.
“இந்தக் கட்டியால் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டி வெடிக்கவிருந்தது. அவ்வாறு வெடித்திருந்தால் அது அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது அப்பெண் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டார்,” என்றது இன்டெக்ஸ் மருத்துவமனை.
49 கிலோ எடை கொண்ட அப்பெண், 15 கிலோ எடையுள்ள கட்டியைச் சுமந்து வந்துள்ளார்.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதூரியா, துணைத் தலைவர் மயங்க்ராஜ் சிங் பதூரியா ஆகியோர் பாராட்டினர்.


