புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதே உத்தியை எதிர்த்தரப்பு ஐந்து ஆண்டுகள் கழித்தும் முயலும் என்றும் அப்போது இந்தியா உலகின் சிறந்த மூன்று பொருளியல்களில் ஒன்றாக விளங்கும் என்றும் கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதையும் அப்போது தாம் 2023ஆம் ஆண்டிலும் இது மறுபடி நடக்கும் என்று குறிப்பிட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.
எதிர்க்கட்சியினருக்கு ஒரு ரகசிய ‘வரம்’ கிட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் தமக்கு வெற்றி கிடைக்கிறது என்றார் திரு மோடி.
“கனவை நனவாக்கும் சக்தியை நமது இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஊழலற்ற அரசையும் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் அளித்திருக்கிறோம். நாட்டின் நம்பிக்கையை மிகப் பெரிய உயரத்துக்கு நாங்கள் கொண்டு சென்றிருக்கிறோம். ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைக்க சிலர் முயல்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“1991ல் நாடு நொடித்துப்போகும் நிலையில் இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு சிறந்த ஐந்து பொருளியல்களின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் 2028ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது நாடு முதல் மூன்று பொருளியல்களில் இடம்பெற்றிருக்கும்,” என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 150 பேர் உயிரிழந்த மணிப்பூர் கலவரங்கள் தொடர்பில் எதிர்த்தரப்பு ‘இண்டியா’ கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
அதற்குப் பதிலளித்த பிரதமர், எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்துக் கவலை இல்லை என்றும் அதிகாரப் பசிதான் அவர்களின் மனங்களில் உள்ளது என்றும் சாடினார்.
இருப்பினும், பிரதமர் மோடி ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேசிய நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதுவும் பேசாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நிச்சயம் அமைதி திரும்பும் என்று தாம் நம்புவதாக திரு மோடி கூறினார். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்வதாகவும் மணிப்பூர் பெண்களுக்குத் தீங்கு இழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

