ஏர் இந்தியாவுக்குப் புதிய சின்னம்

ஏர் இந்தியாவுக்குப் புதிய சின்னம்

2 mins read
9d043680-bb99-405f-9f46-6a3e1d9f0a51
புதிய சின்னத்துடன் ஏர் இந்தியா விமானம். - படம்: ஏர் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமானச் சேவையை இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் விலைக்கு வாங்கியது.

அக்குழுமத்தின் டலாஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனம் இதனை தற்போது நிர்வகிக்கிறது. ஏர் இந்தியாவை மிகவும் லாபகரமானதாகவும் தரமான விமானச் சேவை நிறுவனமாகவும் இயக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை டாடா நிறுவனம் எடுத்து வருகிறது.

அண்மையில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் 470 புது விமானங்களைப் பல கோடி செலவில் வாங்கியது. நிறுவனத்தின் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, விமானங்களின் வெளிப்புறத் தோற்றத்திலும், பெயரிலும், ஏர் இந்தியாவிற்கான சின்னத்திலும் பல மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் அனைத்து விமானங்களையும் சேவைக்குப் பயன்படுத்த இருக்கிறது.

இதன்படி, ‘தி விஸ்டா’ என அழைக்கப்படும் அந்தச் சின்னம், ஒரு தங்கத்திலான சன்னல் கட்டத்தைப்போல தோற்றமளிக்கிறது.

“இந்த புதிய மாற்றங்கள் டிசம்பர் மாதம் ஏர்பஸ் ஏ350 விமானத்தை முதன்முதலாக மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும்போது தெரியவரும். துணிச்சலான பார்வை, வரம்புநிலை இல்லாத சாத்தியங்கள், முன்னேற்றம், நம்பிக்கை ஆகியவற்றை இந்தப் புதிய சின்னம் குறிக்கிறது.

“உலகத் தரத்தில் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு மேன்மையான பயண அனுபவத்தை புதிய மாற்றங்களைக் கொண்ட ஏர் இந்தியா வழங்கும். இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம், விருந்தோம்பல் ஆகியவற்றை உலகம் முழுவதும் இது பறைசாற்றும்,” என டாடா குழுமம் தெரிவித்தது.

பல ஆண்டுகளாக இருந்து வந்த ஏர் இந்தியா மகாராஜா அடையாளம் தற்போது மாற்றப்பட்டு புதுப்பொலிவுடனான விமான சேவையை நோக்கி ஏர் இந்தியா மேம்படுவதைப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்