நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்திரெட்டி பாலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்-சசிகலா தம்பதியின் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை அலிபிரி வனப்பகுதியில் சிறுத்தை இழுத்துச்சென்று அடித்து கொன்றுவிட்டது.
சிறுமியின் உடல் பகுதி மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதி வழியாக தினேஷ் குமார்-சசிகலா தம்பதியர் தங்கள் மகளுடன் சென்றுகொண்டு இருந்த போது அந்தச் சிறுமி வேகமாக படிகளில் ஏறி ஓடியதாகவும் அப்போது அவரைச் சிறுத்தை கவ்வி தூக்கிக் கொண்டு ஓடி கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்தது.
திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் வசிப்ப தாகவும் அவற்றில் 10 சிறுத்தைகள் பக்தர்கள் நடைபாதை வரை அடிக்கடி நடமாடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

