பிரதமர் மோடி: ஊழலை இந்தியா அறவே சகித்துக்கொள்ளாது

பிரதமர் மோடி: ஊழலை இந்தியா அறவே சகித்துக்கொள்ளாது

2 mins read
36628f3e-af74-4af9-86a6-a0611c6dbfdc
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கோல்கத்தாவில் நடைபெறும் ஜி20 ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துகொண்டு பேசினார்.  - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: இந்தியா ஊழலை அறவே சகித்துக்கொள்ளாது. ஊழலுக்கு எதிராக கடும் சட்ட திட்டங்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தின் தலைநகரான கோல்கத்தாவில் நடக்கும் ஜி20 ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

ஊழல் காரணமாக ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒளிவு மறைவு இல்லாத, தவறுக்குப் பொறுப்பு ஏற்கக்கூடிய செயல்முறை ஒன்றை உருவாக்கும் வகையில் அதிக தொழில்நுட்பத்தையும் இணைய ஆட்சிமை முறைகளையும் இந்தியா விவேகமாகக் கைக்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வணிகத்துக்கான பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகச் கூறிய பிரதமர், அரசு சேவைகளில் தானியங்கி முறை, மின்னிலக்கமயம் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வருவதாகவும் ஊழலுக்கு எதிராக போராடுவது மக்களுக்கு ஆற்றவேண்டிய புனிதமான கடமை என்றும் திரு மோடி கூறினார்.

வெளிநாட்டுச் சொத்துக்களை விரைவாக மீட்க ஏதுவாக குற்றத் தீர்ப்பு இல்லாத சொத்து பறிமுதல் முறையை ஜி20 நாடுகள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், அது உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் தப்பியோடிய குற்றவாளிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா, கடந்த 2018ஆம் ஆண்டு பொருளியல் குற்றவாளிகள் சட்டத்தை இயற்றியது.

அதற்குப் பிறகு US$1.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன என்று திரு மோடி கூறினார்.

பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 2014ஆம் ஆண்டில் இருந்து US$12 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்